Tuesday, July 7, 2020

அலகுகள் இறகுகள் சிறகுகள்

”தம்பி, என்ன இந்தப் பக்கம்?”

“விநாயகரை சேவிச்சுண்டு போலாம்னு வந்தோம் சார்.  இவா ரெண்டு பேரும் என் கிளாஸ்மேட்ஸ்”

“அப்போ, நீங்க மூணு பேருமே பாலிடெக்னிக்கா?”

“ஆமா சார், சிவில் படிக்கறோம்”

“தம்பி சொல்றேன்னு கோவிச்சுக்காதே...!  இவ்ளோ பழம், தேங்காயெல்லாம் வாங்கிட்டுப் போறீங்களே?  சாமி அதை சாப்பிடப் போவுதா?”

“படைக்கும்போது, அதிலிருக்கற எங்க பக்தியை அவர் எடுத்துக்குவார்.  வெறும் பழத்தை நாங்க திருப்பி எடுத்துகிட்டு வந்துருவோம்” என்றான் கூட வந்தவர்களில் ஒருவன்.

“பரவால்லியே, நல்லா பேசறீங்களே?  சரி, அர்ச்சகர் சொல்ற மந்திரமெல்லாம் சாமிக்கு புரியுதோ இல்லையோ, உங்களுக்குப் புரியுதா?”

“புரிஞ்சே ஆகணும்னு ஏதாவது கட்டாயமா சார்?  மொழியில என்ன இருக்கு?”

“சரி தம்பி, உங்க மூணு பேருக்கும் படிப்பு முடிஞ்சு, வேலைக்குப் போறீங்கன்னு வெச்சுக்கங்க.  அதுல ஒருத்தருக்கு ஒரு ஜப்பான் கம்பெனியில வாய்ப்பு கிடைக்குது.  பயிற்சிக்காக ஆறு மாசம் ஜப்பானுக்கு வாங்கன்னு கூப்பிடறாங்க. என்ன செய்வீங்க?”

“யாருக்கு கெடச்சாலும் அவங்க கண்டிப்பா போவோம்”

“சரி, அங்கே போய் முதல் நாள் பயிற்சிக்காக ஆடிட்டோரியத்துல உக்காந்திருக்கீங்க.  மொத்தமுள்ள 60  கேண்டிடேட்டுகளின் பெயர், நாடு, ஊரோட ஒரு பட்டியல் ஒட்டியிருக்காங்க.  இப்போ, நிதானமா அந்த சூழலை யோசிச்சு சொல்லுங்க, அந்த லிஸ்டுல நீங்க எதை ‘மொதல்ல’ தேடுவீங்க?”

“மொதல்ல ஊரு, அப்புறம் நாடு.  முகம் தெரியாம வெறும் பேரைத் தெரிஞ்சு என்ன ஆகப்போவுது?”

“எதுக்கு தம்பி புது எடத்துக்குப்போனா, அங்கே ஊர் பேரை தேடுறே?”

“சார், ஜப்பான்ல பெரும்பாலும் இங்லீஷ் பேச மாட்டாங்க.  அப்படி இருக்கும்போது தமிழ் தெரிஞ்ச நம்ம பசங்க ஃபிரெண்ட்ஷிப் கிடைச்சா, ரொம்ப நல்லாயிருக்குமே?”

“ஓஹோ?  பேரை வெச்சு அவங்க என்ன மதம்னு கண்டுபிடிச்சா, நாளைக்கு அங்கே ஒரு சர்ச்சுக்கோ, மசூதிக்கோ, கோயிலுக்கோ போக வசதியா இருக்குமே?”

“அது அடுத்த கட்டம்.  ஆனா, மொதல்ல தமிழ் தெரிஞ்ச ஒரு பையனை பிடிச்சுக்கிட்டாத்தான், அங்கே ஒரு சிக்கல்னா இங்கே நம்ம பேரண்ட்ஸ் அவங்க பேரண்ட்ஸோட போன்ல பேச முடியும்”

“இவ்ளோ சங்கதி இருக்கும்போது, ‘மொழியில என்ன இருக்கு?’ன்னு சாதாரணமா கேட்டுட்டியேப்பா?”

“... ...”

“சாதி, மதம், இனம், நாடு இது அத்தனையையும் கடந்து முன்ன நிக்கறது ஒருத்தனோட மொழி.  ஏன்னா இந்த நாலுல, மொழிதான் மொதல்ல பிறந்தது.

ஒரே மொழியைப் பேசுன சனமெல்லாம், ஒரே இனம்.
அந்த இனத்தின் வழிபாடுதான் பின்னாளில் மதம்.
சனத்தை ஆரம்பத்தில் தொழில்வாரியா பிரிச்சபோது, சாதி.
இனங்கள் பெறுகி ஒவ்வொண்ணும் விரிவடைஞ்சா, நாடு.

நாட்டின் வரைபடம், அம்பது வருசத்துக்கு ஒருமுறை மாறிக்கிட்டேயிருக்கும்.  வேற சாமியைக் கும்பிட்டா, மதம் மாறிடும்.  ஆனா, மொழி மாறாது...!

மொழியை உயிர்த்துடிப்போட வாழவைக்க சனம் வேணும்.  மொழி வாழணும்னா, அதுக்கு ஒரு தொடர்ச்சி வேணும்.  ஒரு மொழி உயிரோட இருக்கா, செத்துடுச்சான்னு கண்டுபிடிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கு.

’ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் அந்த மண்ணில் தோன்றிய ஒருவரை இன்று வரவழைத்தால், அவர் பேசுவது நமக்குப் புரியுமா?’ன்னு பார்த்தா போதும்...!

ஒரு பாட்டியும் அவரது பேத்தியும் பேசிக்கிட்டா அது தாய்மொழித் தொடர்ச்சி.  அதே பதினைஞ்சு நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த அவ்வைப்பாட்டி இன்னைக்கு வந்து பேசினா, அது அவரோட பத்துகோடி பேரன் பேத்திகளுக்குப் புரியும்னு சொன்னா, அந்த மொழிதான் உயிர்த் தொடர்ச்சியுள்ள மொழி...!”

“அப்போ, ஜப்பான்ல போயி நாங்க இண்டியன்ஸ்னு சொல்லி ஒரு க்ரூப் சேரக்கூடாதா?”

“தாராளமா சேரலாம்.  அதுவும் முக்கியம், ஆனா டோக்கியோ ஏர்போர்ட்டுல போயி இறங்கும்போது பாரதமாதா படத்தை வெச்சுக்கிட்டு ஆளைத் தேட முடியாது.  இங்கே ‘தல்லி தெலுங்கானா’ இருக்காங்க, கன்னட ராஜ்யோஸ்த்தவா தினம் இருக்கு, தமிழன்னை இருக்காங்க, ஒவ்வொரு தேசிய மொழிக்கும் ஒரு அன்னை இருக்காங்க.  ஆனா, பாரதமாதா என்னைக்கும் இருந்ததில்லை, அவங்க சமீபத்துல விடுதலை போராட்டத்துக்குத் தேவைப்பட்ட ஒரு பிம்பம்.

தம்பி, சுருக்கமா சொல்லணும்னா, ஒரு பறவையின் வாழ்க்கை அதன் அலகிலிருந்து புறப்படும் ஒலியிலதான் இருக்கு...!  அதை வெச்சுதான் அது தன் இணையை, உறவுகளை அடையாளம் காண முடியும்...!



ஒலியைக் கேட்டு கிட்ட வந்தப்புறம்தான், அது இறகுகளையும் சிறகுகளையும் பார்த்து சேர்ந்து பறக்கும், இரைதேடி கூடு கட்டும்.   மற்ற ஆயிரக்கணக்கான பறவை இனங்களோட அது ’வேடந்தாங்கலில்’ கூடி வாழ்ந்தாலும், பல ஆயிரம் மைல் கடந்துவந்து கூடடையும்போது, தன் சொந்தங்களைக் கண்டுகொள்ள அது ஒலியெழுப்பித்தான் ஆகணும்....!”