Monday, December 21, 2015

நடுத்தர வயதில் ஆங்கில வாசிப்பினை ஆரம்பிப்பது எப்படி?

"இணையத்திலும் நேர்ப்பேச்சிலும் நண்பர்கள் ஆங்கில நூல்களின் பெயர்களைச் சொல்லி அவற்றிலிருந்து மேற்கோள் காட்டும்போது எனக்கு வெட்கமாக இருக்கிறது.  அடிப்படை ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் பெரிய ஆங்கில புதினங்கள், பத்திகள் இவற்றைப் படிக்க என்னால் இயலவில்லை.  நடுத்தர வயதில் ஆங்கில வாசிப்பினை ஆரம்பிப்பது எப்படி?"


ஆங்கில நாவல்களையும், புத்தகங்களையும் வாசிக்க ஆரம்பிக்கும்போது, இதுவரை ஒருவகையில் கிணற்றுத் தவளையாக இருந்த நாம், புதிய உலகங்களிலும், பன்முகக் கலாச்சாரங்களிலும் வாழ ஆரம்பிக்கிறோம்.

வயதாகிவிட்டதே என்ற தயக்கம் தேவையில்லை.  மாறாக, இப்போதாவது ஆர்வம் வந்ததே? என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள்!  இருவகை செயல்பாடுகளின்மூலம் ஆங்கில வாசிப்பினை நீங்கள் முன்னெடுக்கலாம்.

முதலாவதாக ஆங்கிலத்திலிருந்து உங்கள் தாய்மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட (Translation) சிறிய நாவல்கள், சிறுகதைகள், பத்திகள் ஆகியவற்றை 'உங்கள் தாய்மொழியிலேயே' படிக்க ஆரம்பிப்பது.  வரவிருக்கும் நாட்களில் நேரடியாக ஆங்கில நாவல்களைப் படிக்கும்போது உங்களுக்கு நேரக்கூடிய 'கலாச்சார அதிர்ச்சியிலிருந்து' (Cultural Shock) தப்பிக்க இது உதவும்.

இரண்டாவதாக, பின்வரும் வரிசைப்படி ஆங்கில நூல்களை வாசிக்கும் பயிற்சியினை மேற்கொள்ளலாம்.

1) டின்டின் Tin Tin மற்றும் ஆஸ்ட்ரிக்ஸ்  Asterix படக்கதைகளிலிருந்து தொடங்குவது நல்லது.  மேலோட்டமாகப் பார்க்கும்போது சிறுவருக்கான காமிக்ஸ்தானே என்று எண்ணத் தோன்றுவது இயல்பு.

வரலாறு, பண்பாட்டு மொழிகள், தேசிய இனங்கள், பேரரசுகளின் சின்னங்கள், கட்டிடங்கள், தொன்மங்கள், குறுங்குழுக்கள் இவற்றினை எளிய பகடிகளினூடாக கடந்துசெல்லும் பெறும் இலக்கிய மதிப்பு கொண்டவை Asterix காமிக்ஸுகள் என்றால் நம்புவதற்கு கடினமாக இருக்கும்!


Asterix and Cleopatra

Asterix the Gladiator

Asterix and the Cesar's Gift

Asterix and the Normans

Asterix at the Olympic Games


ஆங்கில மொழிப்பயிற்சி, நவீன தேசியங்கள், நகரங்கள், அறிவியல், விஞ்ஞானம் இவற்றினை சரியான விகிதத்தில் கலந்து சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவத்தினைத் தருபவை Tin Tin காமிக்ஸுகள்.  இந்த உலகில் ஒரு மாதம் வாழுங்கள்.


The Black Island

Explorers on the Moon

Cigars of the Pharaoh

The shooting Star

The secret of the Unicorn


இவற்றை பெரிய விலை கொடுத்து வாங்க வேண்டியதில்லை. இணையத்திலேயே தேடிப்படிக்கலாம்.  அல்லது பழைய புத்தகக் கடைகளிலோ, நூலகங்களிலோ கிடைக்கும்.

2) இரண்டாம் நிலையில் பல நூல் வரிசைகள் இருந்தாலும், என்னுடைய பரிந்துரை, Enid Blyton எனிட் பிளைட்டனின் குறுநாவல்களே ஆகும்.  இவற்றுள் ஒரு பத்துக் கதைகளை நீங்கள் படிக்கும்போதே மூன்றாம் நிலைக்குச் செல்ல தயாராகிவிடுவீர்கள்!


The famous five

The secret seven

இந்த உலகில் இரண்டாம் மாதம் வாழுங்கள்.


3) ஆங்கில வாசிப்புப் படிநிலையில் James Hadley Chase ஜேம்ஸ் ஹேட்லி சேஸின் நாவல்கள் மூன்றாம் படிநிலைக்கு உவப்பானவை.  நாற்காலி நுனி சுவாரஸ்யங்களுக்கு குறைவைக்காதவை.

சுஜாதாவின் "அவன் மிகவும் இறந்து கிடந்தான்" He was very much dead போன்ற சொல்லாட்சிகள், பாலகுமாரனின் மெர்க்குரிப்பூக்களில் வரும் ஸ்டிலட்டோ Stiletto என்ற கத்தி எங்கிருந்து உருவப்பட்டது, போன்றவற்றை அறியக் கிடைக்கும் சுவாரஸ்யங்களும் உங்களுக்கு வாய்க்கும்!


No orchids for miss Blandish

Flush of the Orchid

The way the Cookie crumbles

The Vulture is a patient Bird

An ear to the ground

இந்த உலகில் மூன்றாம் மாதம் வாழுங்கள்.


4) ஆங்கில நாவல் உலகின் முடிசூடா மன்னனாகிய Harold Robbins ஹெரால்ட் ராபின்ஸின் புனைவுலகிற்குள் நீங்கள் நுழையும் தருணம் வந்துவிட்டது!  இவர் தொடாத துறைகளோ, இவர் முயற்சி செய்யாத கதைசொல்லும் நுட்பமோ அநேகமாக இல்லை!

Never Leave me நாவலின் கடைசி அத்தியாத்தினையும் முதல் அத்தியாயத்தினையும் இடம் மாற்றி அமைத்திருப்பார்!  Beginning as the End, End as the Beginning!  அவ்வளவு தன்னம்பிக்கை!

கதாநாயகன் செத்துப்போய் சரியாகப் பத்து வருடங்கள் கழித்து ஒரு நாவல் Never Love a Stranger ஆரம்பிக்கும்!


Goodbye Jennet

The Dream Merchants

79 Park Avenue

The Betsy

The Piranhas

இந்த உலகில் நான்காம் மாதம் வாழுங்கள்.


5) இரண்டாம் உலகப்போரில் போர்க்கைதியாகப் பிடிபட்டு, போர் முடிந்ததும் அற்புதமான எழுத்தாளனாக தன்னை வளர்த்தெடுத்த James Clavell ஜேம்ஸ் க்ளாவல் அவர்களின் நூல்களை இனி நீங்கள் வாசிக்கத் துவங்கலாம்!

பெரும்பாலும் அனைத்து நாவல்களும் ஒரு கண்ணியால் பிணைக்கப்பட்டிருப்பதால், அடுத்தடுத்த புத்தகங்களை எடுக்கும்போதும் நீங்கள் அயற்சியுற வழியில்லை.


King Rat

Tai Pan

Shogun

Noble House

Whirlwind


இவரைத் தாண்டிச்செல்ல உங்களால் முடிந்தால், அடுத்து Alistair Maclean அலிஸ்டர் மேக்லியனை வாசித்துப்பாருங்கள்.


The Guns of Navorone

Goodbye california

Puppet on a chain

South by Java head

The dark Crusader சிறு தேர்வு!   Jean. M. Auel  ழான். எம். ஆயல். அவர்களின் புத்தகங்களில் ஏதாவது ஒன்றினை வாசித்துக் கடந்து செல்ல முடிகிறதா? என நீங்களே முயற்சி செய்து பாருங்கள்.


The Clan of the Cave bear

The Valley of Horses

The Mammoth Hunters

The Plains of Passage

The land of painted Caves


ஆம், எனில் நீங்கள் இனி உங்களுக்கு விருப்பமான எந்த ஆங்கில நூலையும் வாசிக்க முடியும்!

ஆங்கில நாவல்கள், நூல்கள் என்பவை மிகப்பெரிய பெருங்கடல்!  அவற்றில் முதன்முதலில் எப்படி ஒரு படகு தள்ளி இறங்கி துடுப்புப்போடுவது என்று மட்டுமே நான் கோடிட்டுக் காட்டியுள்ளேன்.

பல வரிசைகள், பட்டியல்களில் இதுவும் ஒரு பட்டியல், அவ்வளவுதான்.

நானே படிக்காத எதையும் நான் உங்களுக்குப் பரிந்துரைக்கவில்லை.

இவற்றில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின், என் சுவற்றிலோ அல்லது angaisnet@gmail.com என்ற எனது மின்முகவரியிலோ தெரியப்படுத்தவும்.

வாழ்த்துக்கள்!

Tuesday, May 5, 2015

இலக்கிய மாஃபியாக்கள்!

காண்டீபத்தினை தேரின் இருக்கையில் சாய்த்துவிட்டு,  தான் ஒரு பக்கம் சோர்ந்து அமர்ந்துவிட்ட எஸ்ரார்சுனனைப் பார்த்து தேரோட்டியின் இருக்கையில் அமர்ந்திருந்த யுவகிருஷ்ணன் பேச ஆரம்பித்தான்!

"அருமை எஸ்ராமகிருஷ்ணா!   மொக்கை போடுவதில் நமக்கெல்லாம் முன்னோடியாகிய சுஜாதனுக்கு 'இலக்கிய மதிப்பில்லை' என்று நாக்கூசாமல் நவிர்ந்திட்ட விஷ்ணுபுரத்தானாகிய ஜெயயோதனுக்கு தக்க பாடம் புகட்டிடவே நாம் இங்கே போர்க்கோலம் புனைந்துள்ளோம் என்பதை நீ அறியமாட்டாயா?"

"நன்கு அறிவேன் யுவகிருஷ்ணா!  ஆனால் போர்க்களத்திற்கு வந்தபின்பு என் மனம் சஞ்சலமடைகிறதே?"

"அரைத்த மாவையே அரைத்து அதில் பாண்டித்யம் கண்டுள்ள நீ, மனம் குழம்பலாமா?  வேடிக்கை பார்க்கும் வாசகர்களல்லவா கலங்க வேண்டும்?  உன்னையே நம்பி போர்ப் பிரகடனம் செய்துள்ள மாஃபியகுல மூத்தகுடி தருமமனுஷ்யபுத்திரனை நீ கைவிடலாமா?  எடு உன் காண்டீபத்தினை!  தொடுத்து எறி உன் மொக்கைப் பத்திகளை!"

"யுவகிருஷ்ணா!  யாருக்கு எதிராக எய்யச் சொல்கிறாய் என் இலக்கிய அம்புகளை? எதிரே நிற்கும் ஜெயயோதனும், நாஞ்சில்நாடனும், இயக்குனர் பாலாவும், அ.கா.பெருமாளும் யார்?  நம் இலக்கிய சொந்தங்கள் அல்லவா? இவர்களுக்கு எதிரே இலக்கிய மொக்கைப்போர் புரிந்து வெல்லத்தான் வேண்டுமா?"

"அருமை எஸ்ரா!  உன்னால் வீழ்த்தப்படாவிட்டாலும் இவர்கள் அனைவரும் யாரோ ஒருவரிடம் வம்பிழுத்து அடித்துக்கொண்டு சாகத்தான் போகிறார்கள்!  அது இலக்கிய உலகின் சாபக்கேடு! 

விஷ்ணுபுரத்தவரிடம், இணையமாஃபிய குலம் அடிபணிந்தது என்ற அபகீர்த்தி உன்னால் ஏற்படக்கூடாது.  ஆம், ஜெயயோதனன் தன்னிகரில்லா இலக்கிய வில்லாளனேதான்.  அவனுடைய 'காடன்விளி' என்ற ஒற்றை 'சிறுகதா'யுதம் கொண்டு தாக்கினாலே போதுமே!  அதன் பூடகம் ஒரு பயலுக்கும் புரியாமல் போர்க்களத்திற்கே பித்துப்பிடித்துவிடுமே?  அதனால் என்ன?  விஷ்ணுபுரத்தவரின் பத்மவியூகத்தினை உடைத்து வெளிவரத் தெரியாவிட்டாலும், ஆவேசத்தோடு உள்ளே நுழைந்து கெத்து காட்டும் பால்மணம்மாறாப் பாலகன் வாமணிகண்டமன்யூவைப் பார்!  இடியென எழுந்து புயலெனப் போர் புரிவாயாக!

"அனைத்தையும் அறிந்த லக்கிலுக் யுவகிருஷ்ணா!  கோடானுகோடி மொக்கைப் பக்கங்களை எழுதிக்குவித்திருக்கும் எதிரிகள் சாமானியமானவர்களல்ல!  நான் தோல்வியைக்கண்டு அஞ்சவில்லை!  ஆனால், இவர்களோடு மோதினால் கிளம்பும் புழுதியில் இணையமாஃபியகுலக் கொழுந்துகளாகிய அருமை அண்ணன் தருமமனுஷ்யபுத்திரன், பீமதிஷா, நகுலமுருகன், விநாயகமுருகன் போன்றவர்களின் பெயர் வாசகப்போர்க்களத்தில் நாறுமே என்றுதான் அஞ்சுகிறேன்!"

"எஸ்ரா குழந்தாய்!  உனக்கு இந்த மாபெரும் இலக்கியவெளியின் ஞான மார்கத்தினை போதிக்கிறேன் கேள்!  புழுதி கிளம்பினாலும், கிளம்பாவிட்டாலும், அனைத்து எழுத்தாளர்களின் பெயரும் பெருமையும் ஒருநாள் நாறத்தான் போகிறது!  உன்னுடைய பேனா அம்பு முனையிலிருந்துதான் வன்முறை வெடிக்கிறதென்று ஏன் கற்பனையாக நினைக்கிறாய்?  இலக்கியமென்பதே பெரும்பாலும் தெருச்சண்டைதானே?  ஆகவே தொழில் செய்துகொண்டிரு, அதே நேரம் மொக்கைபோடாமலும் இராதே!"

- தொடரும்