Tuesday, May 5, 2015

இலக்கிய மாஃபியாக்கள்!

காண்டீபத்தினை தேரின் இருக்கையில் சாய்த்துவிட்டு,  தான் ஒரு பக்கம் சோர்ந்து அமர்ந்துவிட்ட எஸ்ரார்சுனனைப் பார்த்து தேரோட்டியின் இருக்கையில் அமர்ந்திருந்த யுவகிருஷ்ணன் பேச ஆரம்பித்தான்!

"அருமை எஸ்ராமகிருஷ்ணா!   மொக்கை போடுவதில் நமக்கெல்லாம் முன்னோடியாகிய சுஜாதனுக்கு 'இலக்கிய மதிப்பில்லை' என்று நாக்கூசாமல் நவிர்ந்திட்ட விஷ்ணுபுரத்தானாகிய ஜெயயோதனுக்கு தக்க பாடம் புகட்டிடவே நாம் இங்கே போர்க்கோலம் புனைந்துள்ளோம் என்பதை நீ அறியமாட்டாயா?"

"நன்கு அறிவேன் யுவகிருஷ்ணா!  ஆனால் போர்க்களத்திற்கு வந்தபின்பு என் மனம் சஞ்சலமடைகிறதே?"

"அரைத்த மாவையே அரைத்து அதில் பாண்டித்யம் கண்டுள்ள நீ, மனம் குழம்பலாமா?  வேடிக்கை பார்க்கும் வாசகர்களல்லவா கலங்க வேண்டும்?  உன்னையே நம்பி போர்ப் பிரகடனம் செய்துள்ள மாஃபியகுல மூத்தகுடி தருமமனுஷ்யபுத்திரனை நீ கைவிடலாமா?  எடு உன் காண்டீபத்தினை!  தொடுத்து எறி உன் மொக்கைப் பத்திகளை!"

"யுவகிருஷ்ணா!  யாருக்கு எதிராக எய்யச் சொல்கிறாய் என் இலக்கிய அம்புகளை? எதிரே நிற்கும் ஜெயயோதனும், நாஞ்சில்நாடனும், இயக்குனர் பாலாவும், அ.கா.பெருமாளும் யார்?  நம் இலக்கிய சொந்தங்கள் அல்லவா? இவர்களுக்கு எதிரே இலக்கிய மொக்கைப்போர் புரிந்து வெல்லத்தான் வேண்டுமா?"

"அருமை எஸ்ரா!  உன்னால் வீழ்த்தப்படாவிட்டாலும் இவர்கள் அனைவரும் யாரோ ஒருவரிடம் வம்பிழுத்து அடித்துக்கொண்டு சாகத்தான் போகிறார்கள்!  அது இலக்கிய உலகின் சாபக்கேடு! 

விஷ்ணுபுரத்தவரிடம், இணையமாஃபிய குலம் அடிபணிந்தது என்ற அபகீர்த்தி உன்னால் ஏற்படக்கூடாது.  ஆம், ஜெயயோதனன் தன்னிகரில்லா இலக்கிய வில்லாளனேதான்.  அவனுடைய 'காடன்விளி' என்ற ஒற்றை 'சிறுகதா'யுதம் கொண்டு தாக்கினாலே போதுமே!  அதன் பூடகம் ஒரு பயலுக்கும் புரியாமல் போர்க்களத்திற்கே பித்துப்பிடித்துவிடுமே?  அதனால் என்ன?  விஷ்ணுபுரத்தவரின் பத்மவியூகத்தினை உடைத்து வெளிவரத் தெரியாவிட்டாலும், ஆவேசத்தோடு உள்ளே நுழைந்து கெத்து காட்டும் பால்மணம்மாறாப் பாலகன் வாமணிகண்டமன்யூவைப் பார்!  இடியென எழுந்து புயலெனப் போர் புரிவாயாக!

"அனைத்தையும் அறிந்த லக்கிலுக் யுவகிருஷ்ணா!  கோடானுகோடி மொக்கைப் பக்கங்களை எழுதிக்குவித்திருக்கும் எதிரிகள் சாமானியமானவர்களல்ல!  நான் தோல்வியைக்கண்டு அஞ்சவில்லை!  ஆனால், இவர்களோடு மோதினால் கிளம்பும் புழுதியில் இணையமாஃபியகுலக் கொழுந்துகளாகிய அருமை அண்ணன் தருமமனுஷ்யபுத்திரன், பீமதிஷா, நகுலமுருகன், விநாயகமுருகன் போன்றவர்களின் பெயர் வாசகப்போர்க்களத்தில் நாறுமே என்றுதான் அஞ்சுகிறேன்!"

"எஸ்ரா குழந்தாய்!  உனக்கு இந்த மாபெரும் இலக்கியவெளியின் ஞான மார்கத்தினை போதிக்கிறேன் கேள்!  புழுதி கிளம்பினாலும், கிளம்பாவிட்டாலும், அனைத்து எழுத்தாளர்களின் பெயரும் பெருமையும் ஒருநாள் நாறத்தான் போகிறது!  உன்னுடைய பேனா அம்பு முனையிலிருந்துதான் வன்முறை வெடிக்கிறதென்று ஏன் கற்பனையாக நினைக்கிறாய்?  இலக்கியமென்பதே பெரும்பாலும் தெருச்சண்டைதானே?  ஆகவே தொழில் செய்துகொண்டிரு, அதே நேரம் மொக்கைபோடாமலும் இராதே!"

- தொடரும்
 

No comments:

Post a Comment